பிட் அடிக்க அனுமதி மறுப்பு...165 பள்ளிகளில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை! உ.பி.,யில் அவலம்
உ.பி.,யில் பொதுத் தேர்வின் போது ‘காப்பி’ அடிப்பதைத் தடுத்தால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. 165 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பீகார் உள்ளிட்ட உ.பி மாநில பொதுத் தேர்வில் மாணவர்கள் ‘பிட்’ அடித்துத் தேர்வில் வெற்றி பெறுவதாகப் புகார்கள் எழுந்தன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் புத்தகத்தை எடுத்துச் சென்று, தேர்வு எழுதும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் ’காப்பி’ அடிக்க, ஆசிரியர்களே உதவும் காட்சியும் வெளியானது. விடைத்தாள் திருத்தும் பணியில் மோசடி, வினாத்தாள் வெளியான விவகாரம் என உ.பி., மாநிலத்தின் கல்வித் தரம் அகல பாதாளத்திற்கு சென்றது.
இதையடுத்து, பொதுத்தேர்வு நடவடிக்கையில் பயங்கர கெடுபிடி காட்டியது அம்மாநில பள்ளிக்கல்வித் துறை. தற்போது, வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் அந்த நடவடிக்கை எதிரொலித்திருக்கிறது. பொதுத் தேர்வெழுதிய 165 பள்ளிகளைச் சேர்ந்த எந்தவொரு மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், 385 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். புத்தகத்தை வைத்து ‘காப்பி’ அடிக்க அனுமதி வழங்கிய போது 100 சதவீத தேர்ச்சி அடைந்த கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த 13 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில பள்ளிக் கல்வி இயக்குநரான வினய் குமார், ’பொதுத் தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது’ என்றார். தற்போது, வெளியாகி உள்ள தேர்வு முடிவுகளை வேதனை அளிப்பதாகவும், உ.பி.,யின் கல்வித் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் மீது வைரஸ் கிருமி தாக்குதல்..! கூட்டணி அரசுதான் தேவை..! - மகேந்திரா சேர்மன் பளிச்