அவர் நல்லவர் இல்லை...பதில் கூறமாட்டேன்! தங்க தமிழ்செல்வனை விளாசிய ஓபிஎஸ்

பிரதமர் மோடி தனது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, வாரணாசியில் பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணியில், பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார்(தேனி வேட்பாளர்) கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.

அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன், ‘தன் மகனுக்கு எம்.பி பதவி;தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக மோடி நடத்திய பேரணியில் ஒபீஸ் கலந்துகொண்டு உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓபிஎஸ் வாரணாசி சென்றிருப்பாரா..? தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை பாஜகவில் இணைந்து விட்டார்’ என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓபிஎஸ், ‘தொண்டர்களின் இயக்கமாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பாஜக-வில் இணைந்து உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள் தனமான கருத்து; தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்ததே அவர் கருத்துக்கு நான் பதில் சொல்வதே இல்லை. அதனால், அவர் கருத்துக்கு நான் பதில் கூற மாட்டேன். நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன்’ என்றவரிடம் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘4 எம்.எல்.ஏ-க்களும் அமமுகவில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஆவணங்கள் சபாநாயகரிடம் உள்ளன’ என்றார்.

முன்னதாக, பன்னீர்செல்வத்துடன் இணைந்து தர்மயுத்தம் நடத்திய முக்கிய நபர்கள் தங்களுக்கு மக்களவைத் தேர்தலில் ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால் ஓபிஎஸ் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்து அவரை கருக வறுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லுக்கட்டும் திமுக.. அதிமுக.. அமமுக ..! குன்றத்தில் கொடி நாட்டப் போவது யார்?
More News >>