ஃபேஸ்புக்: மொழி பதிவுகளின் உண்மை தன்மை ஆய்வு

முகநூல் நிறுவனம் இந்திய மொழிகளில் செய்யப்படும் பதிவுகளிலுள்ள உண்மை தன்மை குறித்த ஆய்வினை விரிவாக்கியுள்ளது. தற்போது 10 இந்திய மொழிகளில் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவியதால் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. தற்போது இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் போலி செய்திகள் பரவாமல் தடுப்பதற்காக சமூக ஊடகங்கள், பதிவேற்றப்படும் செய்திகளின் உண்மை தன்மையை அறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்திய மொழி பதிவுகளில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்கு பல நிறுவனங்களின் துணையை ஃபேஸ்புக் நாடியுள்ளது. ஒரு பதிவில் வரும் செய்தி உண்மையானதாக தெரியவில்லை என்ற தகவல் இந்நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டால் ஃபேஸ்புக், அச்செய்தி பகிரப்படுவதை 80 விழுக்காடு குறைத்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் என்னும் இயந்திர வழி கற்றல் மற்றும் அல்காரிதம் என்னும் படிமுறைகள் ஆகியவற்றை பயன்படுத்தியும் போலி செய்திகள் இனங்காணப்படுகின்றன.

தமிழ் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் பதிவேற்றப்படும் பதிவுகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்கு ஃபேஸ்புக் நடவடிக்கை எடுத்தது. தற்போது கூடுதலாக உருது, பஞ்சாபி ஆகிய மொழிகளில் செய்யப்படும் பதிவுகளும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில் 10 இந்திய மொழிகளில் வெளியாகும் பதிவுகளில் இருக்கும் செய்திகளின் உண்மை தன்மை துணை நிறுவனங்களால் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற இருப்பதால் போலி செய்திகள் வெளியாகிவிடக்கூடாது என்ற அழுத்தம் காரணமாக கூடுதல் நடவடிக்கை எடுக்கும் நிர்ப்பந்தம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More News >>