திரிணாமுல் எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் - மம்தாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
திரிணாமுல் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் உங்கள் கட்சியில் பெரும் கலகமே நடக்கப் போகிறது என்று மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
மே.வங்கத்தில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். இதனால் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை குறிவைத்து தாக்குதல் நடத்தி பாஜக காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று 4-ம் கட்டத் தேர்தலில் மே.வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பல இடங்களில் பாஜக -திரிணாமுல் கட்சியினரிடையே பெரும் மோதல் வெடித்தது.
மே.வங்கத்தில் ஒரு பக்கம் தேர்தல் நடக்கும் சூழலில், ஸ்ரீராம்பூரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகையில், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மம்தாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இந்தத் தேர்தலில் மம்தா கை நிறைய எம்பிக்களை பெறப் போவதும் இல்லை. மம்தாவுக்கும் டெல்லிக்குமான தூரம் ரொம்ப அதிகமாகப் போகிறது.
தோற்று விடுவோம் என்ற பயம் மம்தாவுக்கு வந்து விட்டது. அதனாலேயே மாநில போலீசை தன்னுடைய தனிப்பட்ட ஏஜென்சி போல் பயன்படுத்தி தேர்தலில் தில்லு முல்லு செய்யப் பார்க்கிறார்.வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறார்.
இந்த தேர்தலுக்குப் பின் திரிணாமுல் கட்சிக்குள்ளேயே பெரும் கலகம் நடக்கப் போவது உறுதி. மம்தா கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களால் மம்தாவின் அரசுக்கு ஆபத்து நேரிடலாம் என்றெல்லாம் பிரதமர் மோடி கடுமையாக எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு திரிணாமுல் கட்சித் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது பிரதமர் மோடியே குதிரை பேரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டார் என்று அவரை விமர்சித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி .
அவர் நல்லவர் இல்லை...பதில் கூறமாட்டேன்! –தங்க தமிழ்செல்வனை விளாசிய ஓபிஎஸ்