திடீர் வேலைநிறுத்தம் அடிதடி புகாரில் மேலாளர் - சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஊழியர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ஊழியர்கள் சங்கம் ஆரம்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் நிரந்தர ஊழியர்கள் இருக்கும் போது தற்காலிக ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு நிறைய சம்பளம் தருகிறார்கள். எங்களுக்கு சம்பளம் உயர்த்தி தர மறுக்கிறார்கள் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கேட்டதற்காக மெட்ரோ ரயில் ஊழியர் ஒருவரை இணை பொது மேலாளர் சதீஷ் பிரபு தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சதீஷ் பிரபுவை கைது செய்ய வேண்டும் என இன்று மாலை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் மெட்ரோ ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் அவர்கள் பணிகள் திரும்ப மறுத்துள்ளனர். இதனால் தற்போது தற்காலிக ஊழியர்களைக்கொண்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில், நாளை காலை மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக ஊழியர்கள் போராட்டத்தால் ரயில்களில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.