நம்புகிறோம்.... கோப்பையை கைப்பற்றுவோம்.. உலகக்கோப்பை குறித்து வங்கதேச வீரர் நம்பிக்கை
உலகக்கோப்பை போட்டிகள் குறித்து வங்கதேச அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதில் வங்காளதேச அணியும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் காலிறுதி வரை முன்னேறியது. இதுவே உலகக்கோப்பையில் இந்த அணியின் அதிகபட்ச இடம். இருப்பினும் பல முறை எதிரணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த முறை மொர்தசா தலைமையில் உலகக்கோப்பையில் களமிறங்கிறது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் பேசியுள்ளார். அதில், ``உலகக்கோப்பையை வெல்வதற்காகவே செல்கிறோம். வெறுமனே போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அல்ல. இந்த முறை கோப்பையை வெல்ல முடியும் என நம்புகிறோம்.
நாக் அவுட் சுற்றுக்கு எங்களால் முன்னேற முடியும். ஆனால் நாக் அவுட் சுற்றில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் போட்டிகளை எளிதாக நினைத்துக்கொண்டு விளையாட மாட்டோம். எல்லா அணிகளும் ஒவ்வொரு வகையில் வலிமை ஆனது தான். வங்கதேசமும் அதைப் போல தான். மற்ற தடவைகளை போல அல்லாமல் இந்த முறை எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய 5 பேர் இந்த முறை பங்கேற்றுள்ளனர். நாங்களும் வலிமையான அணியாக தான் இருக்கிறோம். கடந்த சில போட்டிகளில் எங்களது பினிஷிங் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் தற்போது வலிமையான பேட்டிங் லைன் அப் வைத்துள்ளோம். எங்கள் கேப்டன் மொர்தசாவுக்கு இதுவே கடைசி உலககோப்பையாக இருக்கலாம். அதனால் இதனை வென்று அவருக்கு உணர்ச்சிபூர்வமான விடை கொடுக்க விரும்புகிறோம்." எனப் பேசியுள்ளார்.