நீங்க காலாவதி பிரதமர்... உங்க கூட ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார்... மோடிக்கு திரிணாமுல் பதிலடி

மோடியின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று மேற்குவங்க மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், ``பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மம்தாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இந்தத் தேர்தலில் மம்தா கை நிறைய எம்பிக்களை பெறப் போவதும் இல்லை. மம்தாவுக்கும் டெல்லிக்குமான தூரம் ரொம்ப அதிகமாகப் போகிறது. தோற்று விடுவோம் என்ற பயம் மம்தாவுக்கு வந்து விட்டது. அதனாலேயே மாநில போலீசை தன்னுடைய தனிப்பட்ட ஏஜென்சி போல் பயன்படுத்தி தேர்தலில் தில்லு முல்லு செய்யப் பார்க்கிறார். வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறார்" என்றவர், `` திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜியை விட்டு விலகி விடுவார்கள் என்றும், தற்போது கூட, அக்கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தம்மிடம் தொடர்பில் இருக்கின்றனர்" என போகிற போக்கில் ஒரு குண்டை வீசி சென்றார். இது மேற்குவங்க அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிக் ஓ'பிரைன், ``பாஜகவுக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது. மோடி காலாவதியான பிரதமர். அவருடன் ஒருவர் கூட வருமாட்டார்கள். ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார். நீங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்களா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறீர்களா?. உங்களுடைய காலாவதி தேதி விரைவில் வருகிறது. நீங்கள் குதிரை பேரம் நடத்துவதாக இன்று நாங்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.

More News >>