தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை
வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததால், தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
வங்கதேசத்தில் டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தீவிரவாத தடுப்பு படைகள் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை ஒன்றை சுற்றி வளைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் தாக்குதலை தீவிரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை.
இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர். இது குறித்து சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது கூறுகையில், அவர்கள் யாரென்பதை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அவசியமாகும். மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இதற்கிடையே வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவியை போலீஸ் கைது செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாமிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தற்கொலை செய்துக்கொண்டவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்பர் தராததால் தபால் நிலையத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்