டிரான்ஸ்பர் தராததால் தபால் நிலையத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்
மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில், பணியிட மாறுதல் தரவில்லை என்ற ஆத்திரத்தில் அங்கிருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோயல்ராஜ். கடந்த ஆண்டு ஆள்பற்றாக்குறை காரணமாக பொதக்குடி தபால் நிலையத்துக்கு ஜோயல்ராஜ் மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டத்துக்கு பணிமாறுதல் கேட்டு மேலாளரிடம் கடிதம் கொடுத்து இருந்தார் ஜோயல்ராஜ்.
ஆனால் அவருக்கு பணியிட மாறுதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோயல்ராஜ், மது போதையில் தபால் நிலையத்துக்குள் புகுந்து கண்ணாடிகள், அங்கிருந்த கணிணிகள், இருக்கைகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்.
சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், ஜோயல்ராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்த வருகின்றனர்.
தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை