அமெரிக்காவில் குக்கர் குண்டு வைக்க சதி? முன்னாள் ராணுவ வீரர் கைது!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் கடந்த ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சர்வதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தேவலாயங்களில் குண்டு வைக்க திட்டமிட்டவரை போலீசார் கைது செய்து, பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுத்துள்ளனர். இது குறித்து, அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் நிக் ஹன்னா கூறியதாவது:
அமெரிக்க ராணுவத்தில் முன்பு பணியாற்றிய மார்க் ஸ்டீவன் டொமிங்கோ(26) என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறோம். அவர் கடந்த வாரக் கடைசியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்கள், காவலர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் போட்டிருந்தார். இதற்காக குக்கர் குண்டு தயாரித்து வைத்திருந்தான். நல்லவேளையாக அவனை முன்கூட்டியே கண்டுபிடித்து கைது செய்து விட்டோம்.
மொமிங்கோ சமீபத்தில் முஸ்லிமாக மாறியிருக்கிறார். அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அமெரிக்காவுக்கு இன்னொரு ‘வேகாஸ்’ நிகழ்வு தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, கடந் 2017ம் ஆண்டு அக்டோபரில் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தரப்பட வேண்டுமென்ற வகையிலும் அவர் பேசியிருந்தார். காவல் துறை உரிய நேரத்தில் புலனாய்வு செய்து அவரை கைது செய்ததால் அசம்பாவிதம் நிகழ்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நிக் ஹன்னா தெரிவித்தார்.
முகத்தை மறைக்கும் 'புர்கா' உள்ளிட்ட ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை - இன்று முதல் அமல்