தலையிடக் கூடாது... கிரண்பேடிக்கு செக் -உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு.
புதுச்சேரி அரசின் நடவடிக்கையில் தலையிடும் வகையில், அதாவது, அரசின் ஆவணங்களை ஆய்வு செய்வது, ஆவணங்களைக் கேட்பது உள்ளிட்ட அதிகாரத்தை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநரான கிரண்பேடிக்கு வழங்கியது. மத்திய அரசின் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியது. மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநரின் தலையீடு அதிகமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் மாநிலத்தின் உரிமைகளை பாதிக்கும் விஷயமாக இருக்கும் என்று பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கிய இந்த அனுமதி அதிகாரத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி அரசு தரப்பில் பல்வேறு வாதங்களை எடுத்து வைத்திருந்தார். அதன் பிறகு, தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் முன்பு வந்தது. அப்போது,‘புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 2017ல் மத்திய அரசு வழங்கிய அதிகாரங்கள் ரத்து செய்யப்படுகிறது. யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களைக் கேட்க மற்றும் முதல்வரின் அதிகாரத்தில் தலையிட ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை’ என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ‘புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை மீறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ எனத் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு ஆதரவு இல்லை! மாயாவதி திடீர் மிரட்டல்!