இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளீர்களா? ராகுல்காந்திக்கு உள்துறை நோட்டீஸ்!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, நீண்ட நாட்களாக ராகுல் காந்தி மீது ஒரு குற்றச்சாட்டு கூறி வந்தார். அதாவது, ராகுல்காந்தி இங்கிலாந்து நாட்டில் ஒரு கம்பெனி இயக்குனராக இருந்ததாகவும், அந்த கம்பெனியை பதிவு செய்த போது தன்னை இங்கிலாந்து குடியுரிமை பெற்றவராக குறிப்பிட்டிருக்கிறார் என்றும் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது மக்களவை தேர்தலில் உச்சகட்டப் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், சுவாமியின் புகார் குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம், ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது: உங்கள் மீது சுவாமி ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில், இங்கிலாந்து நாட்டில் 2003ம் ஆண்டில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி, 51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர், ஹாம்ப்சையர் என்ற முகவரியில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அந்த கம்பெனியின் இயக்குனர் என்று உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டு, பிறந்த தேதியாக 19.6.1970 என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், நீங்கள் இங்கிலாந்து குடிமகன் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 2009ம் ஆண்டில் இந்த கம்பெனி கலைக்கப்பட்ட போதும், நீங்கள் இங்கிலாந்து குடிமகன் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை 15 நாட்களுக்குள் நீங்கள் விளக்க வேண்டும்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டிருக்கிறது.
சுவாமி ஓராண்டுக்கு முன்பே இந்த புகாரை கூறி வந்தாலும் தேர்தலின் போது உள்துறை அமைச்சகம் இந்த நோட்டீசை ராகுல்காந்திக்கு அனுப்பியிருப்பது மோடி அரசின் இன்னொரு பழிவாங்கும் நடவடிக்கையாகவே எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படுகிறது.
‘இனத்தில், குலத்தில்..’ யாரும் செய்யாத விஷயம்! –ஸ்ரீதன்யாவை பாராட்டிய கமல்