ஆட்சியை பிடிக்க திமுக வியூகம்...கலகத்தில் அதிமுக!
காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில், 18 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில், மீதம் உள்ள நான்கு தொகுதிக்கு வரும் மே 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நடைபெறவுள்ள நான்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் முடிவைப் பொறுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் நிலை தெரியவரும் என்ற சூழல் தற்போது நிலவுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கவனம் செலுத்தியதை விட, சட்டமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டதாக கூறி, அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அதிமுக மேலிடத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் சூலூர் தொகுதியை ஜெயத்து கொடுத்தால் 25 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருகிறேன் என்று சூளுரைத்திருந்தார். அதோடு, ஸ்டாலின் முழுமையான முதல்வராக மூன்று திங்கள் ஆகும் என்றும் கூறியிருக்கிறார். சூலூர் தொகுதியில் மட்டும் திமுக தனிக் கவனம் செலுத்துகிறதா? என விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன.
``அதிமுக அமைச்சர்கள், அவர் அவர்கள் தங்கள் விசுவாசிகளுக்கு ‘சீட்’ ஒதுக்க வேண்டும் என முறையிட்டதால் உட்கட்சி பூசல்கள், முட்டல் மோதல்கள் அதிகரித்தன. இதனால், அதிமுகவில் முக்கிய பொறுப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளார்கள். டிடிவி தினகரனுக்கு மட்டும் ஆதரவான நிலைப்பாட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. இந்த சூழ்நிலையைப் பயன் படுத்தி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியை திமுக எடுத்து வருகிறது. அவ்வாறு, கட்சிக்கு ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அதிமுக நடவடிக்க எடுத்தால், அவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிட்டால், அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘சீட்’ ஒதுக்கவும் திமுக தயாராக உள்ளது.
திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் நடக்கவுள்ள நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். துரைமுருகன் கூறியது போல், மூன்று திங்கள் அதாவது மூன்று மாதங்களில் பெரும்பான்மை இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலைக்கவும் நேரிடலாம். இதனிடையில், தேர்தல் முடிவுகள் குறித்து உளவுத்துறை அளித்த தகவல் பழனிசாமிக்கு சாதகமாக வரவில்லை எனக் கூறப்படுகிறது’’.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வாரா..? இல்லை...? போன்ற கேள்விகளுக்கு விடை தேர்தல் முடிவைப் பொறுத்தே தெரிய வரும்.