காங்கிரசுக்கு ஆதரவு இல்லை! மாயாவதி திடீர் மிரட்டல்!
‘‘அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் பா.ஜ.க.வை விட மோசமானதுதான் காங்கிரஸ்’’ என்று கொதித்துள்ளார் மாயாவதி. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரசின் பலம் 114 ஆக இருந்தது. அதில் சிந்த்வாரா தொகுதி எம்.எல்.ஏ, முதலமைச்சருக்காக ராஜினாமா செய்து விட்டதால், தற்போது காங்கிரஸ் பலம் 113 ஆக உள்ளது. அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாடியின் ஒரு எம்.எல்.ஏ., 4 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதால் அரசுக்கு ஆதரவாக 120 இருக்கின்றனர். பா.ஜ.க.வுக்க 109 இடங்கள் உள்ளன.
தற்போது, மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி தனியாகவும், காங்கிரஸ் தனியாகவும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், சமாஜ்வாடி-பகுஜன் கூட்டணி சார்பில் குணா தொகுதியில் லோகேந்திரசிங் ராஜ்புத் நிறுத்தப்பட்டிருந்தார். இந்த தொகுதியில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியில் சேர்ந்து விட்டார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்ற சிந்தியா, அந்தப் படத்தை பதிவிட்டு அவரை காங்கிரசுக்கு வரவேற்பதாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் பா.ஜ.க.வை விட மோசமானதுதான் காங்கிரஸ். எங்கள் கட்சி வேட்பாளரை மிரட்டி பணிய வைத்துள்ளனர். எனவே, ம.பி. காங்கிரஸ் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து யோசிப்போம்’’ என்று கூறியுள்ளார்.
இதன்படி, பகுஜன் சமாஜ் கட்சி, அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்று, சமாஜ்வாடி கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரசின் பலம் 3 குறையும். எனினும், 4 சுயேச்சைகளின் ஆதரவு இருப்பதால் அரசுக்கு ஆபத்து இல்லை
‘தலையிடக் கூடாது...’ கிரண்பேடிக்கு ‘செக்’ -உயர் நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு!