லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு
தமிழகம் உட்பட நாடுமுழுவதும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக லாட்டரி தொழிலை நடத்தி வருபவர் மார்ட்டின். லாட்டரியின் மூலம் ஹவாலா மற்றும் கருப்புப் பணங்களை வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் எனப் பல குற்றச்சாட்டுகள் மார்ட்டின் மீது உள்ளது. இதற்காகவே, ரியல் எஸ்டேட் துறையிலும் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்ற புகார்களும் எழுந்த வண்ணமாக இருக்கிறது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள மார்ட்டின் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது வருமான வரித்துறையினர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி, காங்டாக், ராஞ்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனை நடவடிக்கையை அடுத்து, கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த மார்ட்டினை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது, சோதனையில் சிக்கியது என்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.