அதிமுக கொடி, ஜெயலலிதா படம்.! அமமுக பயன்படுத்த தடை விதிக்கணும்..! தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சிவி.சண்முகம் மனு
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுக கொடி மற்றும் ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார். இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் நியமிக்கப்பட்டனர். அமமுகவின் கொடியாக அதிமுக கொடியின் நடுவில் அண்ணா படம் இருப்பதற்கு பதிலாக ஜெயலலிதா படத்தை இடம் பெறச் செய்து பயன்படுத்தி வருகின்றனர். கரைவேஷ்டியில் எந்த மாற்றமுமின்றி, கருப்பு வெள்ளை சிவப்பு நிறத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்ற காரணத்தாலேயே, அந்த சின்னம் மீண்டும் கிடைக்காமல் அதிமுக தரப்பில் இடையூறு செய்யப்பட்டு, கடைசியில் தேர்தல் ஆணையமும் ஒரேயடியாக குக்கரை ஒதுக்க மறுத்து விட்டது. அதே போல் இப்போது அமமுகவை கட்சியாகவே பதிவு செய்து, பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கு அடுத்த கட்ட நெருக்கடியை கொடுக்க ஆரம்பித்துள்ளது அதிமுக.
அதன்படி, அதிமுக கொடியையோ, ஜெயலலிதா படத்தையோ அமமுகவினர் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். அதிமுகவின் இந்த அடுத்த மூவ் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அமமுகவினருக்கு என்ன மாதிரியான நெருக்கடியை கொடுக்கப் போகிறதோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மேலும் தூங்கி கொண்டிருப்பதா...? –முதல்வரை விளாசிய டிடிவி தினகரன்