முறைப்படி நடக்காத தேர்தல்! ஆளும் கட்சியின் கைப்பாவையான தேர்தல் கமிஷன்..! கருணாஸ்
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் கொறடா உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான செய்திகள் அனல் பறக்க அரசியல் வட்டத்தில் சுழன்று வருகிறது. சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுமா..? அதிமுகவின் அடுத்த நடவடிக்கை என்ன..? என்பதை உன்னிப்பாக அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாடனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஜனநாயக முறைப்படி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செய்யல்பட்டதாக கூறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் அதிமுக கொள்கைக்கு எதிராக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். முன்னுக்கு முரணான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் தொறடா உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
அவர்களது பட்டியலில் எனது பெயர் இல்லை. இருப்பினும், சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினால் அதற்கான பதிலை அளிப்பேன். அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் அந்த நேரத்தில் எனது முடிவைத் தீர்மானிப்பேன்’ என்று அதிமுகவுக்கு எதிராக மறைமுகமாகக் கருத்து தெரிவித்து உள்ளார் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி மீதான கடும் அதிருப்தியில், கட்சிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கருணாஸ் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.