விளக்கம் கொடுங்க..!தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்
அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டப்பேரவை இடைத் தேர்தல், தொடர்ந்து மே 19-ந் தேதி 4 தொகுதி களுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டு மே 23-ந் தேதி 22 தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த 22 தொகுதிகளில் கணிசமான இடங்களை கைப்பற்றா விட்டால் அதிமுக ஆட்சி பறிபோகும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கையாக, தினகரன் தரப்பு ஆதரவாளர்களாக உள்ளஅறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் சபாநாயகர் தனபாலிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் கொடுத்திருந்தார்.
தினகரனுடன் மூன்று எம்எல்ஏக்களும் இருக்கும் புகைப்படங்களை ஆதாரமாக கொடுத்து, 3 பேர் மீதும் கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்குமாறு கொறடா ராஜேந்திரன் புகார் செய்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சபாநாயகரின் நோட்டீசுக்கு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேரும் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருந்தாலும் ஏற்கனவே தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது போன்றே இவர்களின் பதவியும் பறிக்கப்படும் வாய்ப்புகள் தான் அதிகம் என்று கூறப்படுகிறது. மே 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பின்பே சபா ராயகரின் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.