`நீங்க நினைக்கிற மாதிரி இல்ல - கிரிக்கெட் வாரியத்தின் பதிவால் அதிர்ந்த ஆஸ்திரேலிய பௌலர்

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர் இட்ட ஒரு பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர். பின்னாளில் ஆல் ரவுண்டராகவும் வலம் வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணியாகவும் இருந்தார். இருப்பினும் சமீப காலமாக ஃபார்ம் இல்லாமல் தவித்து வருவதால் அணியில் இடம்கிடைக்காமல் தவித்து வருகிறார். இதற்கிடையே நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படமும், சில கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். அதில் அவரது அம்மாவுடன் இன்னொரு மனிதன் இருப்பதை குறிப்பிட்டு, `போட்டோவில் இருப்பவர் எனது பாய் பிரண்ட். நானும் அவரும் கடந்த 5 வருடமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால் அவருக்கு விருந்து அளித்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் பாய் பிரண்ட் எனக் குறிப்பிட்டதால் பால்க்னெர் ஓரினச்சேர்க்கையாளர் என நினைத்து அனைவரும் கமெண்டுகளளை பதிவிட்டனர். சிலர் வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளர் எனக் கூறுகிறாரே எனச் சொல்லி அவரை வாழ்த்தினர். ஏன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூட அவரை வாழ்த்தி டுவீட் போட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பால்க்னெர் இன்று மீண்டும் ஒரு பதிவை இட்டார். அதில், ``ராப் ஜுப் என்னுடைய சிறந்த நண்பர். அவர் என்னுடன் ஐந்து வருடங்கள் வசித்து வருகிறார். என்னுடைய போஸ்ட்-ஐ பார்த்து அப்படி புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பது தெரிகிறது. LBGT சமுதாயத்திடம் இருந்து ஆதரவு வந்தது சிறப்பானது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. அன்பு அன்புதான் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது" எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவரின் இந்த பதிவை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.

More News >>