தினகரனுடன் படம் எடுத்த மற்றவர்கள் மீது என்ன நடிவடிக்கை..?- அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கேள்வி
டிடிவி தினகரனுடன் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருமே படம் எடுத்துக் கொண்டவர்கள் தான் என்றும் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுடன் இவர்கள் 3 பேரும் இருக்கும் புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் செய்ததால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர் தனபால் . என்னஅதிமுகவுக்கு எதிராக செயல் படவில்லை.
இந்த நோட்டீஸ் குறித்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கருத்து கூறுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தான் நான் வாக்களித்தேன். நான் வாக்களித்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகவே இருக்கிறார். அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரை ஏன் இன்னும் தகுதி நீக்கம் செய்யவில்லை என்றும் பிரபு தெரிவித்துள்ளார்.
இதே போல் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி கூறுகையில், சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்தவுடன் முறையாக விளக்கம் கொடுப்போம். ஆனாலும் தினகரனுடன் இருப்பதுபோல முதல்வர் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் எல்லாருக்கும் படம் இருக்கிறது. அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.