தேர்வில் பங்கேற்காததை கண்டித்த தலைமையாசிரியருக்கு கத்தி குத்து - ராமதாஸ் கண்டனம்
செய்முறை தேர்வில் பங்கேற்காமல் வகுப்பறையில் அமர்ந்திருந்ததை தலைமையாசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்து மாணவர் கத்தியால் குத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியரை அப்பள்ளியில் பயிலும் மாணவரே கத்தியால் குத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆசிரியர் முழு நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்முறைத் தேர்வில் பங்கேற்காமலும், படிக்காமலும் வகுப்பறையில் அமர்ந்திருந்ததை தலைமையாசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்து மாணவர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவனோ தம்மை தலைமையாசிரியர் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கல்வி வணிகமயமாக்கப்பட்டதன் விளைவாக கடவுளாக வணங்கப்பட வேண்டிய ஆசிரியர்களை கத்தியால் குத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் கல்வி முறை சீரழிந்தது தான் இவை அனைத்துக்கும் காரணமாகும்.
நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்விமுறை, அதிக மதிப்பெண்களை எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும்.
பணம் பறிப்பது மட்டுமே பள்ளியின் நோக்கமாகவும், தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே பெற்றோரின் விருப்பமாகவும் மாறிப் போனதாலும், மாணவர்களின் உணர்வுகள் யாராலும் மதிக்கப்படாமல் போனது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை தெருவுக்குத் தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளும், கல்லூரிகளுக்கு அருகிலேயே கிடைக்கும் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களும், குற்றங்களை எப்படி செய்வது என்பதைக் கற்றுத் தரும் திரைப்படங்களும் தான் இத்தகைய தவறான பாதைக்கு அழைத்துச் சென்று சீரழிக்கின்றன.
கல்வி என்பது சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய, இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். அத்தகைய கல்வி முறையை ஏற்படுத்துவதுடன், நீதிபோதனை, விளையாட்டு, யோகா ஆகியவற்றை கட்டாயமாக்கி, கல்வி என்பதை மாணவர்கள் மகிழக்கூடிய ஒரு செயலாக மாற்றுவதன் மூலம் தான் இத்தகைய செயல்களுக்கு முடிவுகட்ட முடியும். இதை மனதில் கொண்டு கல்வித்துறையில் சீர்திருத்தங்களை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.