அர்த்தமுள்ள அழகு: பிரச்சாரத்தில் உலக அழகி மனுஷி சில்லர்
உலக அழகி மனுஷி சில்லர் தனது முதற்கட்டப் பயணமாக மாதவிடாய் சுகாதாரம் குறித்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் சமீபத்தில் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். மருத்துவ மாணவியான இவர் பெண் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியக் கிராமங்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகக் கூறினார்.
தற்போது தேசிய அளவில் மாதவிடாய் கால நாப்கின் சேலஞ்ச் நடந்து வரும் சூழலில் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து மனுஷி சில்லர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கொல்கத்தா, ஐதராபாத், சிலிகுரி போன்ற நகரங்களில் கடந்த நான்கு நாள்களாக மாதவிடாய் சுகாதாரம் குறித்து 'அர்த்தமுள்ள அழகு' என்ற தலைப்புடன் இளம் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகிறார்.
இதுதொடர்பாக நாடு முழுவதும் விரைவில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் மனுஷி சில்லர் தனது எதிர்காலத் திட்டமாகக் கூறி வருகிறார்.