போலி மருத்துவரால் 5 மாத கர்ப்பிணி பலி

பொள்ளாச்சி அருகே கரு கலைப்புக்காக போடப்பட்ட ஊசியால் 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக உள்ள போலி ஆயுர்வேத மருத்துவர் மீதும் அவரது மகன் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

நெகமம் அடுத்த மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்வராஜின் மனைவி வனிதாமணி, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவர்களுக்கு 5 குழந்தைகள் இருந்ததால் இனி குழந்தை வேண்டாம் என கருதி, கருக்கலைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.

5 மாதம் வளர்ந்துவிட்ட கருவை அரசு மருத்துவமனை சென்றால் கலைக்க மாட்டார்கள் என்பதால் தனியார் மருத்துவரை அணுக முடிவெடுத்துள்ளனர். இதனால் வடசித்தூரில் உள்ள “யேகோவாநிஷி ஆயுர்வேதிக் செண்டர்” என்ற மருத்துவமனைக்கு சென்றனர். அந்த மருத்துவமனையை நடத்திவந்த ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியும் அவரது மகன் கார்த்திக்கும் வனிதாமணியின் வீட்டுக்கே வந்து கருக்கலைப்புக்கான ஊசியை செலுத்தினர்.

ஊசி போட்ட அடுத்த சில நிமிடங்களில் வனிதாமணியின் உடல்நிலை மோசமடைய துவங்கியது. இதனால் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கார்த்திக்கும் மருத்துவர் முத்துலட்சுமியும் தலைமறைவாகினர்.

இதுகுறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 314 கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், முத்துலட்சுமியையும் கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். மாவட்ட சுகாதார இயக்குநர் தரப்பில் இருந்தும் முத்துலட்சுமி, கார்த்திக் ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.மேலும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தை
More News >>