பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
கொல்கத்தா விமான நிலையத்தில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருபவர் தொழிலதிபர் மார்ட்டின். தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறார்.
காகிதம், இணையதளம், மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக லாட்டரி தொழிலை செய்து வரும் மார்டின் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் 10 இடங்கள், கோவையில் 22 இடங்கள், மேலும் மும்பையில் 5, கொல்கத்தாவில் 18 இடங்களிலும், டெல்லி, கவுஹாத்தி, சிலிகுரி, ராஞ்சி, உள்ளிட்ட இடங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போயஸ் தோட்டம் வீனஸ் காலணியில் உள்ள அவரது மகள் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது அவரது மகள் டெய்சி புதிதாக வாங்கிய ஃப்ரிட்ஜ் ஒன்றை ஊழியர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதை உள்ளே அனுமதிக்காமல் சோதனை முடிந்த பிறகே எந்த பொருளையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என கூறிவிட்டனர்.
நீலாங்கரையில் உள்ள அவரது மகன் வீடு ஒன்றிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல திருவல்லிகேணியில் அவரது மூத்த மகன் சார்லஸ் மார்டின் நடத்தி வரும் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மகன் வீட்டிலும், அடையாறில் உள்ள மார்டினின் மருமகன் வீடு என 10 இடங்களில் சோதனை நடக்கிறது.
கோவை வெள்ளைகிணறு பகுதியில் உள்ள மார்டினின் வீடு, கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உட்பட 22 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக கூறும் அதிகாரிகள், கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து மார்ட்டினை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்தி 80 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்ட பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கி நில அபகரிப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் கடந்த 2011 -ம் ஆண்டு மார்டின் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பெங்களூரு; மழையால் ரத்தான போட்டி வெளியேறியது பெங்களூரு அணி!