பிறந்த மறுநிமிடம் என் கைகளில் தவழ்ந்தவர் ராகுல் காந்தி...! பழைய நினைவுகளில் மூழ்கிய வயநாடு நர்ஸ் பாட்டி
ராஜம்மா வாவாத்தில்... கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 72 வயது மூதாட்டியான இவர் ஓய்வு பெற்ற நர்ஸ். நர்சிங் படிப்பு முடித்தவுடன் 1970-ல் டெல்லியில் உள்ள பிரபல ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்த ஓரிரு மாதங்களில் தான் அந்த அதிசயம்,ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. அது வேறொன்றுமில்லை... அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு பேரன் பிறந்தது இந்த மருத்துவமனையில் தான். அந்தப் பேரன் யார் தெரியுமா? அடுத்த பிரதமராக வரத் துடிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான்.
48 ஆண்டுக்கு முன் பிறந்த மறு நிமிடம் தன் கைகளில் முதன் முதலில் தவழ்ந்த குழந்தை இத்தனை பெரியவனாகி, தற்போது தான் வசிக்கும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடும் ராகுல் காந்தி பற்றி மிக்க சந்தோஷமடைந்துள்ளார் ராஜம்மா பாட்டி. 48 ஆண்டுகளுக்கு முன் அவர் பிறந்த தினத்தில், தான் சந்தித்த அனுபவங்களை, மாய்ந்து மாய்ந்து தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஜம்மா பாட்டி.
1970 ஜுன் மாதம் 19-ந் தேதி பிற்பகலில் நான் புரிந்த மருத்துவமனையில் சோனியா காந்தி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். பிரதமர் குடும்பத்து மருமகள் என்ற எந்தவித பந்தாவும் ஆர்ப்பாட்டமான சூழல் ஏதுமின்றி சாதாரணமாகவே காணப்பட்டார் சோனியா .எங்களுக்குத்தான் பிரதமர் வீட்டு பேரக்குழந்தை நமது மருத்துவமனையில் பிறக்கப்போகிறது.
நாம் தான் பிரசவம் பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிறிது நேரத்திலேயே நல்லபடியாக சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை, அதுவும் நாட்டின் பிரதமர் இந்திரா காந்திக்குப் பேரனாக ராகுல் காந்தி பிறந்தார். பிறந்த மறு நிமிடம் என் கைகளில் தான் தவழ்ந்தார். பிற நர்சுகளுடன் சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்தோம். பெற்ற அன்னைக்கு முன்னதாக குழந்தையை கைகளில் தூக்கி தவழச் செய்து கொஞ்சி மகிழ்ந்தது இன்னும் அப்படியே நினைவில் உள்ளது.
அப்போது பிரசவ வார்டுக்கு வெளியே ராஜுவ் காந்தியும் அவருடைய சகோதரர் சஞ்சய்காந்தியும் வெள்ளை நிற குர்தா உடையில் ரொம்ப நேரமாக நின்றிருந்தனர். மருத்துவமனை விதிகளை தளர்த்தி, பிரசவ வார்டு உள்ளே சென்று குழந்தையை பார்க்குமாறு கூறியும் மறுத்து விட்டனர். சுற்றுப்பயணம் முடிந்து 3 நாட்கள் கழித்து வந்த பிரதமர் இந்திராவும் விதிகளை மீறாமல் மருத்துவமனை வந்து விட்டு ராகுலை பார்க்காமல் சென்று விட்டார். அந்தச் சமயத்தில் பிரதமர் இந்திரா குடும்பத்தினர் அவ்வளவு எளிமையாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டனர்.
இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்பு ராகுல் காந்தி, என் சொந்த ஊரான வயநாட்டில் நிற்கிறார் என்ற செய்தி வந்தவுடன் ரொம்ப சந்தோஷமாகி விட்டது. பிறந்து முதன் முதலில் என் கைகளில் தவழ்ந்த ராகுல் காந்தியை இப்போது நேரில் சந்திக்க ஆசையாக உள்ளது. அப்போது அவர் பிறந்த சமயம், என் கைகளில் தவழ்ந்தது, முதன் முதலாக இந்த உலகை கண் விழித்து பார்த்தது போன்றவற்றையெல்லாம் கதை கதையாக பெருமையாக கூற ஆசைப்படுகிறேன். இரண்டாவது முறையாக சந்திக்கும் போது தான் வயநாடு தொகுதிக்கு மருத்துவமனை வசதி உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்பதை கோரிக்கையாக வைப்பேன் என்றார் ராஜம்மா.
வயநாடு தொகுதியில் என் பேராண்டி ராகுல் காந்திக்குத் தான் ஓட்டுப் போட்டேன். வெற்றி நிச்சயம். ராகுலை பிரதமராகவும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் நர்ஸ் ராஜம்மா பாட்டி.
மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம்..! மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி