எனக்குத் திருமணமா..?- ஆர்ப்பரித்த ட்விட்டர், அமைதிப்படுத்திய சல்மான்
இன்று மதியம் பாலிவுட் சூப்பர் 'கான்'களுள் ஒருவரான சல்மான் கான் பதிவிட்ட ஒரு ட்வீட் பதிந்த ஒரு மணி நேரத்திலேயே பரபரப்பைக் கிளப்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் சல்மான் கானே விளக்கமளித்து புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
'பெண் கிடைத்துவிட்டது' என மதியம் 12 மணி அளவில் பாலிவுட் பிரபல ஹீரோ சல்மான் கான் ஒரு ட்விடைப் பதிவிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த ட்விட் தேசிய அளவில் டெரெண்ட் ஆனது. ஒருவழியாக சல்மான் கானுக்குத் திருமணம் நடைபெறப் போகிறது என ஒருசாரரும் சல்மானுக்குத் திருமணம் என அதிர்ச்சி அடைந்த மற்றொரு சாரரும் புரளிகளை அள்ளித் தெளிக்க நிதானமாக தன் படத்துக்கு பப்ளிசிட்டி பெற்ற மகிழ்ச்சியில் தன் ட்விட்டர் பதிவுக்கானக் காரணத்தை விளக்கி ஒரு ட்விட் தட்டினார்.
அதாவது சல்மான் கான் தயாரிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'லவ்ராத்ரே' என்ற திரைப்படத்துக்கான கதாநாயகித் தேர்வுப் படலம் நிறைவடைந்து படத்தில் நடிக்கப் பெண் கிடைத்துவிட்டது என விளக்கமளித்திருந்தார். மேலும், 'இதனால் யாரும் வருத்தமடைய வேண்டாம். சந்தோஷமாக இருங்கள்' என்றும் பதிவிட்டிருந்தார் சல்மான்.
மொத்தத்தில், 'சல்மான் கானுக்குத் திருமணம் நடக்குமா, நடக்காதா? நடக்கும் என நம்பலாமா, நம்பக்கூடாதா? இல்லை நடப்பதற்குத்தான் ஏதாவது அறிகுறி இருக்கா?' என்பதே சல்மானின் தீவிர ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.