மோடி கோஷம் நிதிஷ் முகம் சுளிப்பு! பீகாரில் தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி!

பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, கோத்ரா கலவரம் நிகழ்ந்தது. மோடியால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு பல்வேறு தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார் வெளியேறினார். அதன்பிறகு, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்புதான், மோடியும் நிதிஷும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகாரில்தான் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மோடி, நிதிஷ்குமார், ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணி பலமான கூட்டணியாக தெரிந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் இந்துத்துவா கொள்கைளை தூக்கிப் பிடித்து பேசுவது நிதிஷுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. காரணம், அவருக்கு பீகாரில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குவங்கி உ்ள்ளது.

இந்த சூழலில், கடந்த ஏப்.25ம் தேதியன்று தர்பங்காவில் தே.ஜ. கூட்டணி பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, நிதிஷ், பஸ்வான் மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த தொகுதியில் எதிரணியில் போட்டியிடும் அப்துல்பாரி சித்திக் தனது பிரச்சாரத்தின் போது, ‘‘பாரத் மாதா கீ ஜே! என்று சொல்வதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வந்தே மாதரம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது எங்கள் மதஉணர்வை புண்படுத்துவதாகும்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்பங்கா கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர், ‘‘வந்தே மாதரம் என்பது உயிர்மூச்சு! நாட்டில் அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதே வந்தே மாதரம்’’ என்று பேசினார். அது மட்டுமல்ல. திடீரென இரண்டு கைகளையும் உயரே தூக்கி, வந்தே மாதம் என்ற கோஷத்தை சத்தமாக முழங்கினார். அவரை பின்தொடர்ந்து மேடையில் இருந்த தலைவர்களும் வந்தே மாதரம் என்றனர். ஆனால், இது நிதிஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் அதை சொல்லவே இல்லை.

சில வினாடிகளில் பிரதமரின் கோஷத்துக்கு மேடையில் இருந்த தலைவர்கள் எழுந்து நின்று பின் கோஷமிட்டனர். அப்போது முகம் சுளித்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்த நிதிஷ்குமார், எல்லோரும் எழுந்து நின்ற பின் வேறு வழியில்லாமல் எழுந்தார். ஆனாலும் கோஷமிடவில்லை. இந்த சம்பவம், பா.ஜ.க மற்றும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது அந்த மேடையி்ல் நடந்த நிகழ்வுகள் வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மோடியின் செயல் நிதிஷுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கிறது. அந்த அணி விரைவில் உடையும் என்ற பேச்சும் அடிபடத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதீன் உவைசி கூறுகையில், ‘‘வந்தே மாதரம் சொல்ல மறுத்த நிதிஷ்குமாரை ஆன்டி நேஷனல் என்று பா.ஜ.க.வினர் சொல்லுவார்களா?’’என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்.

More News >>