பிஜேபி-யின் ஒரு கிளையாக..எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும்! -டிடிவி தினகரன்

22 தொகுதியில் வெற்றிபெற்று, எடப்பாடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் படம், தங்கள் கட்சி கொடியில் இருக்கும் நிறங்கள், கரை வேஷ்டிகள் உள்ளிட்வைகளை அமமுக-வினர் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ‘ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயம். முதல்வர் பழனிசாமி தானாக தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார். சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் இவர், விரைவில் முதல்வர் பதவியை ‘ரிஸைன்’ செய்துவிடுவார். புகார் சுமத்தப்பட்ட மூன்று பேரும் ஏப்ரல் 18-ம் தேதி வரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஆதரவாக இருந்தாக குற்றம்சாட்டி உள்ளனர். அவர்கள் மூவரும் அதிமுக அம்மா அணியுடன் சேர்ந்து செயல்பட்டவர்கள்தான். ஏப்ரல் 19ம் தேதி நாங்கள் கட்சி ஆரம்பிப்பதற்காகத் தீர்மானம் போட்டபோது அவர்களைக் கையெழுத்துப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அவர்கள் அம்மா அணியின் உறுப்பினர்கள் தான். மூன்று பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றால், 18 தொகுதி தேர்தல்களை சந்தித்துப் போல் அதையும் சிந்திப்போம். ஓ.பன்னீர்செல்வம் பிஜேபி-யின் ஏஜண்டாக செயல்பட்டதால் தான் அவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினோம். அதிமுகவின் கொடி மாதிரியை அமமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். எத்தனை கட்சி கொடிகள் ஒரே மாதிரி இருக்கின்றது. கரை  வேஷ்டியை பற்றி சொல்கிறார்கள். அதற்கு, பழனிசாமி, பன்னீர்செல்வம், சண்முகம் ஆகியோர் கருப்பு, சிவப்புக்கு நடுவில் காவி நிறத்தை பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், தமிழ்நாட்டில் பிஜேபியின் ஒரு கிளையாய், புரட்சித் தலைவியின் கட்சியை மாற்றிவிட்டார்கள். அதனால், பொருத்தமாக இருக்கும். அதிமுக கொடியில் தாமரை படத்தை வைத்தாலும் அருமையா இருக்கும். 22 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்றார்.

More News >>