திமுக-அமமுக இடையே நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது - எடப்பாடியார் சொல்வதன் பின்னணி

தமிழக அரசியலில் இன்றைய ஹாட் டாபிக் என்றால் 4 தொகுதி இடைத் தேர்தலும், 3 அதிமுக வேட்பாளர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் தான்.

இந்த இரண்டையும் முடிச்சுப் போட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக பக்கம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து புதிய சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார். அதுதான் கோவையில் இன்று எடப்பாடியார் கூறிய திமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது என்ற விமர்சனம். எடப்பாடியார் கூறியதன் பின்னணியில் ஏகப்பட்ட கூட்டல் கழித்தல் கணக்குகள் இருப்பதாகவே படுகிறது.

நடந்து முடிந்த 18 சட்டசபை இடைத் தேர்தலும் நடக்கப் போகிற 4 தொகுதி இடைத் தேர்தலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு அக்னிப் பரீட்சை போன்றதாகி விட்டது. ஆட்சியை தக்க வைக்க எத்தனை தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும் என்ற கணக்கு வழக்குகளை இப்போதே போட்டு வருகின்றனர். ஒரு வேளை மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் ஜெயிக்காவிட்டால், ஆட்சியை தக்க வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை வீட்டுக்கு அனுப்பவும் தயார்படுத்தி விட்டனர்.

ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தலின் முடிவுகள் அதிமுகவுக்கு அவ்வளவாக சாதகமாக இருக்காது என்ற உளவுத் துறை தகவல்களால் பதறிப் போய் உள்ள எடப்பாடி தரப்புக்கு,தற்போது நடைபெற உள்ள 4 தொகுதி தேர்தலிலும் வெற்றி அவ்வளவு எளிதில் இல்லை என்றே கூறப்பட்டுள்ளதாம்.

இதற்கெல்லாம் காரணம் டிடிவி தினகரன் தரப்பு தானாம். 4 தொகுதிகளிலும் பலமான வேட்பாளர்களை நிறுத்தியதுடன், பணபலத்திலும் அதிமுகவுக்கு சவால் விடத் தயாராகி விட்டாராம். தினகரன் தரப்பு கை ஓங்குவது முழுக்க முழுக்க அதிமுகவுக்குத்தான் பாதகம், திமுகவுக்கே சாதகம் என்று தெரிந்து கொண்ட எடப்பாடியார், திமுகவும் அமமுகவும் நெருக்கம் என்ற பகீரை கிளப்பி அதிமுக தொண்டர்களுக்கு அணை போடப் பார்க்கிறார் என்றே தெரிகிறது.

இந்த அடிப்படையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடியார், திமுக எந்த அடிப்படையில் சபாநாயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு கொடுத்தது என தெரியவில்லை. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் கொறடா புகார் அளித்தார். அதன்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள்? எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் கோபமும் கொந்தளிப்பும் ஏற்படுகிறது? இதன்மூலம் திமுகவுக்கும் டிடிவி தினகரன் கட்சிக்கும் இருக்கும் நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் 22 தொகுதி இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றெல்லாம் கூறி தேர்தல் பிரச்சாரத்திலும் திமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே முடிச்சுப் போட்டு எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பது எடப்பாடியாரின் கணக்கு என்று தெரிகிறது. இந்தக் கணக்கு எடுபடுமா? அதிமுக தப்பிப் பிழைக்குமா? என்பது மே 23-ந் தேதி தெரியத்தான் போகிறது.

More News >>