இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை... மடங்கிய சீனா... மசூத் அசாருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய ஐநா
கடந்த மாதம் 14-ம் தேதி, புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில், 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெயிஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர். புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த ஜெயிஷ் இ முகமது அமைப்புமீது இந்திய விமானப் படை சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையால்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாக இந்தியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துவருகிறது. இருப்பினும், சர்வதேச நாடுகளிடமிருந்து பாகிஸ்தானுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருக்கும் ஜெயிஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயன்றுவருகிறது. ஆனால், சீனாவின் உதவியால் பாகிஸ்தான் இந்த முயற்சியைத் தடை செய்துவருகிறது. இதற்கு உலக நாடுகள் மத்தியில் கண்டனம் எழுந்தது. இருப்பினும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று 1267 பாதுகாப்பு குழு ஐநாவில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க கோரிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு முன்பு இதற்கு தடையாக இருந்த சீனா இந்தமுறை எதிர்பார்க்காத வகையில் தீர்மானத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் காட்டவில்லை. இதனால் முறைப்படி சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டார். ``இது இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவின் முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி" என இந்திய வெளியுறவு செயலர் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் இனி மசூத் அசார் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அவருடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். ஜெயிஷ் இ முகமது அமைப்ப்புக்கு எந்த நாடும் ஆயுதங்கள் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.