மாவட்ட நீதிபதிகள் தேர்வில் அதிர்ச்சி முடிவு - 3562 பேரில் ஒருத்தர் கூட தேறவில்லை

தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய இந்த தேர்வில், சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என, 3 ஆயிரத்து 562 பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் பங்கேற்க வழக்கறிஞர்கள் 7 ஆண்டுகள் வரை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கீழ் நீதி மன்றங்களில் 5 ஆண்டுகள் வரை மாஜிஸ்ட்ரேட்டுகளாக பணி புரிந்திருக்க வேண்டும் எனவும் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பிரதான தேர்வு மே 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடக்க உள்ள நிலையில், முதல் நிலைத் தேர்வில் பங்கேற்ற சிவில் நீதிபதிகள் உட்பட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் நிலைத் தேர்வில் பொதுப் பிரிவினர் 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்களும், பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறாதவர்கள், பிரதான தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டர்.

தற்போது, முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், தேர்வெழுதிய 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. எந்த ஆண்டும் இல்லாத வகையில் கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

தேர்வு எழுதிய பலரும் மைனஸ் மதிப்பெண்ணே பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் முதல் நிலைத் தேர்வில் ஒருத்தர் கூட தேர்ச்சி பெறாத நிலையில், மே 25, 26 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த பிரதான தேர்வுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. சட்டம் படித்து வழக்கறிஞர்களாகவும், சிவில் நீதிபதிகளாகவும் பணி புரிந்தவர்களே, தேர்வில் ஒருத்தர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெளிமாநில நீதிபதி முன்னிலையில் மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம் தகவல்
More News >>