மகாராஷ்டிராவில் கமாண்டோ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான பகீர் உண்மை
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சிகரமான அந்த நாளில் அந்த மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வு அரங்கேறியது. கட்சிரோலி மாவட்டத்தின் குர்க்கேடா கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 வாகனங்களை நேற்று அதிகாலை 3 மணிக்கு மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்து கொளுத்தினர்.
இதையடுத்து அங்கு போலீசாரும், கமாண்டோ படையினரும் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கிடைத்த தகவலில் பேரில் மாவோயிஸ்ட்டுகள் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இதற்காக குர்க்கேடாவில் இருந்து கோர்சிக்கு கமாண்டோ படையினர் மூன்று வாகனங்களில் புறப்பட்டனர்.
ஜம்பூர்கேடா என்ற மலையோர கிராமத்தை முதல் இரு வாகனங்களும் கடந்து சென்ற நிலையில், சி -60 கமாண்டோ வீரர்கள் 15 பேர் பயணித்த மூன்றாவது வாகனமும் அந்த இடத்தை கடக்க முயன்றது. அப்போது, திடீரென அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை மாவோயிஸ்ட்டுகள் வெடிக்க வைத்ததில் அந்த வாகனம் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது. அதில் பயணித்த 15 கமாண்டோ வீரர்களும் ஓட்டுநரும் அந்த இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று கூறியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கசான்சூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22 -ஆம் தேதி சி - 60 கமாண்டோ படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் 40 பேர் கொல்லப்பட்டனர். இதன் முதலாமாண்டு நினைவு தினத்தை கடந்த 6 நாட்களாக நக்சலைட்டுகள் அனுசரித்து வந்த நிலையில், துக்கவாரத்தின் கடைசி நாளில் பழிக்கு பழியாக நக்சலைட்டுகள் தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர் என்று மகாராஷ்ட்ரா மாநில அமைச்சர் சுதிர் முங்கன்திவார் கூறியுள்ளார்.
டெல்லியில் பெண் டாக்டர் கழுத்தறுத்து கொலை: நண்பருக்கு போலீசார் வலை