சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்தவர்களை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 28), நாசிக் மைதீன் (36), புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (30), குமரகுரு (37) ஆகியோர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 4 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. 4 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் 4 பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 771 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த பாபு மாதவன் (53) என்பவரை சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.6 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 206 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ்பீர் (26) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர் 2 சுத்தியல்களை வைத்திருந்தார்.
சந்தேகத்தின்பேரில் அதை அதிகாரிகள் கையில் எடுத்து பார்த்தனர். ஆனால் அவை அதிக எடையுடன் இருந்ததால் உடைத்து பார்த்தனர். அதில் 2 சுத்தியலிலும் 2 தங்க உருளை கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள 658 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ரூ.53 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 635 கிராம் எடைகொண்ட தங்கத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கவுஸ் பீர் என்ற வாலிபரை மட்டும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 5 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.சமீபகாலமாக தமிழக விமான நிலையங்களில் அடிக்கடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாடுமுழுவதும் 'புர்கா' அணிய தடை! -மோடியிடம் கோரிக்கை விடுத்த சிவசேனா