உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் தயங்கியது ஏன்?
நாடாளுமன்றத் தேர்தலின் போது உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்ற வேண்டுமென்று தேர்தல் டி.ஜி.பி. கூறியும், தலைமை தேர்தல் அதிகாரி அதை கண்டுகொள்ளவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேலூரைத் தவிர 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் போது ஆளும்கட்சியினர் மீது ஏராளமான புகார்களை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்தும் தேர்தல் ஆணையம் அவற்றை பொருட்படுத்தவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போதே டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோரை ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படக் கூடும் என்று கருதி, அவர்களை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியது.
தற்போது, ஓய்வு பெற்று விட்ட டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு அ.தி.மு.க. அரசு பணிநீட்டிப்பு அளித்துள்ளது. எனவே, பணிநீட்டிப்பில் உள்ள அவர் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருப்பார் என்றும், அவரை கடந்த முறை மாற்றியது போல் மாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இதற்கிடையே, தேர்தல் ஆணையம் முழுக்க, முழுக்க பா.ஜ.க. அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தாக்கலானது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணியில் இருந்து டி.ஜி.பி. ராஜேந்திரன் விலக்கப்பட்டு, தேர்தல் டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார். அவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அதற்குள் தேர்தலே வந்து விட்டது. மேலும், 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்ற வேண்டுமென்று அவர் அனுப்பிய பரிந்துரையை தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு பொருட்படுத்தவே இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து, இந்து ஆங்கில நாளிதழ் பிரத்யேக செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘உளவுத் துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால் அவரை மாற்றி விட்டு, அந்தப் பொறுப்பை கூடுதல் டி.ஜி.பி.(நிர்வாகம்) கந்தசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் டி.ஜி.பி. சுக்லா பரிந்துரைத்தார். இது தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகுவிடம் ஆலோசனை நடத்திய பின்பு, ஏப்ரல் 14ம் தேதி அந்த பரிந்துரையை அளித்தும் அதில் சாகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி, உளவுத் துறை எஸ்.பி. உள்ளிட்ட 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றவும் சுக்லா பரிந்துரைத்ததாகவும் அதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகளால் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறனோ? ஓ.பன்னீர்செல்வம் கதறுவது ஏன்?