செப்.6ம் தேதி நிலவில் இறங்கும் சந்திரயான்-2

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக, ரூ.350 கோடி செலவில் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை தயாரித்து 2008ம் ஆண்டில் விண்ணில் செலுத்தியது. மிகக்குறைந்த செலவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் என்ற பெருமையை சந்திராயன்-1 நமது நாட்டிற்கு பெற்று தந்தது.

இதையடுத்து, நிலவில் மேற்பரப்பை ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன்-2 விண்கலத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தில் இஸ்ரோ கடந்த சில மாதங்களாக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘சந்திரயான்-2 விண்கலம், ஜூலை 9ம் தேதியில் இருந்து ஜூலை16ம் தேதிக்குள் ஜி.எஸ்.எல்.வி- எம்.கே.3 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது. இந்த விண்கலம் அனேகமாக செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும்.

இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்று மூன்று முக்கிய கருவிகள் அனுப்பப்பகிறது. இதில், ஆர்பிட்டரும், லேண்டரும் இணைந்திருக்கும். நிலவில் விண்கலம் இறங்கியதும் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்து தனியாக செல்லும். லேண்டருக்குள் இருந்து ரோவர் பிரிந்து சென்று ஆராய்ச்சிப் பணியை துவக்கும். பூமியின் தென்துருவத்திற்கு நேரே உள்ள நிலவின் பரப்பில் ரோவர் ஆராய்ச்சியில் ஈடுபடும். நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து தகவல்களை ரோவர் உடனடியாக அனுப்பும்’’ என்று தெரிவித்துள்ளது.

சொடக்கு மேல சொடக்கு.. இறுதியில் ஜெயித்தது யார்? - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம்
More News >>