அசாம் தீ விபத்தில் சிக்கி உயிரைவிட்ட சிறுமிகள்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள வீடுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 சிறுவர்கள் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள பஷிஷ்தா நகரில் படார் குச்சி என்ற இடத்தில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு வீட்டில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அருகில் இருந்த 11 வீடுகளுக்கும் மள மளவென பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டிற்குள் இருந்து தப்பிக்க முயன்றனர். மேலும், இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.இருப்பினும், இந்த கோர விபத்தில் சிக்கி மூன்று சிறுமிகள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிறுவர்கள் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.