அலுவலகங்களை கோயில்களாக...அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாம்! கண்டனக் கணைகள் குவியட்டும்! -கி.வீரமணி
திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி இந்து கடவுளான கிருஷ்ணரை பொள்ளாச்சி சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசியாதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களிலும் கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்த வண்ணமாக இருந்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இதையடுத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், கிருஷ்ணரை குறித்து அவர் அவதூராக பேசவில்லை, வீணாக சர்சையை கிளப்புகிறார்கள், அப்படி அவர் பேசியிருந்தால் அது தவறுதான்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை நேற்று உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக அறிக்கையும் வெளியானது. இந்த உத்தரவுக்கு, ``இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல; இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது'' எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் கி.வீரமணி.
‘’மழை பெய்வது எப்படி? மழை பொய்ப்பது எதனால்? என்பதெல்லாம் மூன்றாம் வகுப்பு மாணவியைக் கேட்டாலே படபடவென சொல்லுவார்.ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றால் அவர்கள் படித்த படிப்பைவிட அவர்களின் மூளையில் குடி கொண்டுள்ள மூடத்தனத்தின் குப்பைதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும். யாகத்தாலும், பூஜைகளாலும் காரியம் ஆகும் என்றால், ஆட்சியே தேவையில்லையே! அலுவலகங்களையெல்லாம் கோவில்களாக்கி, அலுவலர்களைப் பூசாரிகளாக்கிவிடலாமே!
யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அறநிலையத் துறையின் வேலையல்ல! அறநிலையத்துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறையே; நிர்வாகம் சம்பந்தப்பட்டது; யாகம், பூஜை புனஷ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல! இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அர சமைப்புச் சட்டத்துக்கு 51-A(h) எதிரானது இது. சட்டத்தை மீறும் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மதச்சார்பின்மையை சின்னாபின்னமாக்கியுள்ளனர்.
கண்டனக் கணைகள் குவியட்டும்! குவியட்டும்!!
அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்ற நிலையில், அரசு அலுவலகங்களில், வளாகங்களில் எந்த மதவழிப்பாட்டுச் சின்னங்களும் இருக்கக்கூடாது என்று சுற்றறிக்கை - ஆணை பிறப்பித்ததுகூட அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்குத் தெரியாதது வெட்கக்கேடு! அச்சட்டம் எப்படி? ஏன் வந்தது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? இந்து அறநிலையத் துறை ஆணையருக்குக் கண்டனக் கணைகள் குவியட்டும்! குவியட்டும்!! என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டிடிவி சின்னமாக இதை கேட்டிருக்கலாம்...செட்டப்செய்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்! -தமிழிசை