இலவசங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கு பதில் அணை கட்டலாம்! உயர் நீதிமன்றம் கருத்து
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மழைநீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க நவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை ஏற்படுத்தக் கோரி வி.பி.ஆர் மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு உள்ளிட்டவற்றைப் பலப்படுத்துவதற்கு அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை அறிக்கையாக சமர்ப்பித்து' விளக்கினார். அப்போது, மனுதாரர் தரப்பில், `ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதைத் தடுக்க முடியும்; நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் வெள்ள சேதங்களுக்கு காரணமாக இருக்கின்றது' என வாதிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை 6 மாதங்களில் அளவிட்டு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பணிகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லையெனில், தென் ஆப்பிரிக்காவை போல, தமிழகத்திலும் தண்ணீர் இல்லா அபாயம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்கும் சூழல் ஏற்படும். இலவசங்களுக்காக நிதியை ஒதுக்குவதற்குப் பதில் அணைகளை கட்டலாம்’ எனக் கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
பிரதமர், அமித்ஷா மீது புகார்! தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!