போலி டாக்டரால் வந்த வினை: உ.பியில் 46 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், மருத்துவ செலவை குறைப்பதற்காக ஒரே ஊசியில் சிகிச்சை அளித்த போலி டாக்டரால் 46 பேருக்கு எச்.ஜ.வி தொற்று பரவி உள்ளது. இது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், உன்னாவோ என்ற மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்காக வரும் மக்களிடம் எச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிக புகார் எழுந்ததை அடுத்து, அம்மாநில சுகாதாரத்துறை சமீபத்தில் இருநபர்கள் கொண்ட கமிட்டியை பிரேம்கஞ்ச், சாகிம்ர்பர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, சுமார் 566 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், 46 பேருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. மிக குறுகிய காலத்தில் இத்தனை பேர் எச்.ஜ.வியால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் குறித்து ஆராயப்பட்டது.
இதில், அங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜேந்திர குமார் என்பவர் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது, செலவரை குறைப்பதற்காக ஒரே ஊசியை பயன்படுத்தி பலருக்கு ஊசி போட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதன் மூலம் தான், மக்களுக்கு எச்.ஐ.வி பரவியது தெரியவந்துள்ளது. மேலும், ராஜேந்திர குமார் முறையாக மருத்துவம் படித்தவர் இல்லை என்பதும் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதையடுத்து, ராஜேந்திர குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் கான்பூரில் உயர் சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.