அஜித்திடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை... பாலிவுட்டுக்கு தாவும் விஷ்ணுவர்தன்

உண்மைக் கதையை தழுவி திரைப்படத்தை இந்தியில் இயக்க இருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித்துக்கு பில்லா 2, ஆரம்பம் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். இவர் தமிழில் இறுதியாக இயக்கிய படம் யட்சன். இப்படமும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் உண்மைக் கதையை மையமாக கொண்டு படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். தமிழில் அல்ல, இந்தியில் இயக்க தயாராகியிருக்கிறார். 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது பலராலும் அறியப்பட்டவர் விக்ரம் பத்ரா. கார்கில் போரின்போது பல சாகசங்களைச் செய்தவர். போரின் போதே நாட்டுக்காக உயிரையும் விட்டார். இவருக்கு இந்த அரசாங்கம் பரம் வீர் சக்ரா விருது வழங்கி பெருமைப் படுத்தியது. கார்கில் போரை மையமாக கொண்டு 2003ல் எல்.ஓ.சி.கார்கில் என்கிற படம் வெளியானது. இப்படத்தில் விக்ரம் பத்ராவாக அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். தற்பொழுது விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையமாக கொண்டு படத்தை இயக்கவிருக்கிறார் விஷ்ணுவர்தன். நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இப்படத்தை இயக்க களம் இறங்கியிருக்கிறார். அஜித் அழைப்பார், எப்படியாவது படம் செய்துவிடலாம் என்று நீண்ட காலமாக காத்திருந்தார் விஷ்ணு. ஆனால் அஜித்திடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் கிடைக்காததால் இந்தி பக்கம் செல்ல முடிவெடுத்துவிட்டார் விஷ்ணு என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்துக்கு வெர்ஷா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் பத்ரா கேரக்டரில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர். விரைவிலே படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

More News >>