10 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் என்கவுண்டர்: பாலியல் வன்கொடுமை, கட்ட பஞ்சாயத்து என பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறதா சேலம்?
சேலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் என்கவுண்டரில் ரவுடி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த என்கவுண்டர் சேலம் பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்ற பீதியையும் கிளப்பியுள்ளது.
சேலத்தில் உள்ள பட்டர்பிளை பாலத்தில் இரவு நேரம் தனியாக வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை மிரட்டி அழைத்து சென்று செல்போனில் ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக ரவுடி வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த 4 பேர் கும்பலின் பின்னணியில் பெரிய ரவுடி கும்பல் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருந்த முருக்குவியாபாரி கணேசன் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பலின் பின்னணியில் வெங்கடேசனின் கூட்டாளிகளான பிரபல ரவுடிகள் காட்டூர் ஆனந்தன், கதிர்வேல், கார்த்தி, முருகன் உள்ளிட்டோரும் இருப்பதாக காவல்துறையிடம் முருக்கு வியாபாரி கணேசன் தகவல் அளித்ததாக கூறப்படுகின்றது.
இதனை அறிந்த ரவுடி காட்டூர் ஆனந்தனின் கும்பல், முருக்குவியாபாரி கணேசன் மீது கடும் கோபத்தில் இருந்தது. கடந்த மாதம் 5ம் தேதி முருக்கு வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த ரவுடி கும்பல் அவரது சடலத்தை சாலையில் வீசிச்சென்றது. முதலில் கணேசன் வாகனம் மோதி விபத்தில் பாலியானதாக கருதப்பட்ட நிலையில் . அது ரவுடிகள் ஆனந்தன் மற்றும் கதிர்வேல் கும்பலின் கைவரிசை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரவுடி காட்டூர் ஆனந்தன் கும்பலை குறி வைத்து காரிப்பட்டி காவல் துறையின் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரவுடிகள் காட்டூர் ஆனந்தன், கதிர்வேல், கார்த்தி, முருகன் ஆகியோரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்த போது கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் குள்ளம்பட்டி அருகே ஆலமரத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதனை கைப்பற்றுவதற்காக அவர்களை அங்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஆயுதங்களை வெளியில் எடுத்த ரவுடி கதிர்வேல் மற்றும் ரவுடிகள் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், மற்றும் உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை தாக்கி உள்ளனர். உடனடியாக் சுதாரித்துக் கொண்டு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தனது துப்பாக்கியை காட்டி எச்சரித்துள்ளார் அதனையும் மீறி ரவுடி கதிர்வேல் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்டதால் அவனை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகின்றது.
இதில் சம்பவ இடத்திலேயே கதிர்வேல் சுருண்டு விழுந்து செத்ததாகவும் இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு காட்டூர் ஆனந்தன், கார்த்தி, முருகன் ஆகிய 3 ரவுடிகளும் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகனிகர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்கு, 3 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கதிர்வேலுவின் சகோதரியை காட்டூர் ஆனந்தன் மணந்துள்ளதால் இருவரும் சேர்ந்து பல்வேறு இடத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
காவல்துறையினர் தற்பாதுகாப்புக்காக சுட்டதில் ரவுடி கதிர்வேல் உயிரிழந்ததாகவும், தப்பி ஓடிய ரவுடிகள் காட்டூர் ஆனந்தன், கார்த்தி , முருகன் ஆகியோரை தேடி வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகனிகர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு, ரவுடி கொரரவி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டபின் நடந்த என் கவுண்டர் சம்பவம் இது என்பது குறிப்பிடதக்கது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சேலம் போலீசார் நடத்திய இந்த என்கவுண்டர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாலியல் வன்கொடுமைகள், கட்ட பஞ்சாயத்துக்கள் போன்ற குற்றங்கள் பெருகி விட்டதா? தற்போது நடந்துள்ள என்கவுண்டர் பல குற்ற வழக்குகளை முடித்து வைப்பதற்காக நடத்த பட்டதா? சாமானிய மக்களுக்கு சேலம் பாதுகாப்பற்ற நகரமா உருவாகி மாறி விட்டதா? என பல கேள்விகளை எழுப்பி விட்டது.
பெரம்பலூர் பாலியல் பலாத்கார விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வக்கீல் கைது: அரசியல் பிரமுகரை காப்பாற்ற போலீசார் தீவிரம்?