விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் தங்கம்: திணறும் சுங்க இலாகா அதிகாரிகள்

தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. சுங்க இலாக அதிகாரிகள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் குற்றவாளிகள் அவருக்கு சாவல் விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கில் தங்க கடத்தலை நடத்திதான் வருகின்றனர்.

கடந்த 3 தினங்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த புதன்கிழமையன்று சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பயணிகளிடமிருந்து சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுங்க அதிகாரிகளிடம் மாட்டி விட கூடாது என்று பயணிகளும் தங்கத்தை விதவிதமாக கடத்தி வருகின்றனர். நேற்று விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம் கூட சவரக்கத்தி, கரண்டி தாங்கியில் மறைத்து ஒரு பயணி கொண்டு வந்து இருந்தார். மற்றொரு பயணி மலக்குடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தார். இவற்றை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து விட்டனர்.

என்னதான் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தாலும், புதுசுபுதுசா ஏதாவது யோசித்து வித்தியாசமான முறையில் பயணிகள் தங்க கடத்தலில் ஈடுபடுவதால் சுங்க அதிகாரிகள் தலை சுற்றி போய் விடுகின்றனர்.

தங்க கடத்தலை தடுக்க வேண்டும் என்றால், தங்கம் மீது விதிக்கப்படும் வரியை குறைக்கலாம், தனிநபர் வரியில்லாமல் தங்கத்தை உள்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான உச்ச வரம்பை சிறிது அதிகரிக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம், விமான நிலையங்களில் அதிநவீன ஸ்கேன் கருவிகள் நிறுவுதல், சோதனை நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டாலே தங்க கடத்தலை குறைத்து விடலாம் என்று மற்றொரு தரப்பினரும் யோசனை கூறுகின்றனர்.

உயிரை பணயம் வைத்து கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
More News >>