விதிமுறைகளை மீறி பணியாளர்கள் நியமனம்! ரூ.1.50 கோடி லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை
சென்னை கோயிலில் ரூ.1.50 கோடி லஞ்சம் பெற்று கொண்டு விதிமுறைகளை மீறி பணியாளர்களை நியமனம் செய்த உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை முகப்பேர் வெள்ளாள தெருவில் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கமிஷனர் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக பணியாளர்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பணியாளர்களிடம் ரூ2 லட்சம் முதல் ரூ4 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமனம் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் பேரில் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவின் பேரில் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா முதற்கட்ட விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், ரூ1.50 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு 40 பணியாளர்கள் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 செயல் அலுவலர்கள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் உதவி ஆணையர் ஒருவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அதாவது பட்டியலில் சேராத கோயில் என்று கணக்கு காட்டி முறைகேடாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்து இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீது 17 பிரிவின் கீழ் கமிஷனர் பணீந்திர ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை நடத்த இணை ஆணையர் ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அதிகாரி பணியாளர், செயல் அலுவலர்கள், உதவி ஆணையரை நேரில் அழைத்து விசாரணை நடத்துகின்றனர். இந்த விசாரணையில் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செக்யூரிட்டி பெண் அதிகாரியை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்!