கடல் கொள்ளையர் கடத்திய 22 இந்திய மாலுமிகள் ஒரு வாரத்திற்கு பின் விடுவிப்பு
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 22 இந்திய மாலுமிகளும் விடுவிக்கப்பட்டு இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பனாமாவில் பதிவு செய்யப்பட்ட எம்.டி.மரைன் எக்ஸ்பிரஸ் என்ற எண்ணெய்க் கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் கடற்பகுதியில் கோட்டனோ என்னுமிடத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நின்றபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான அந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் 22 பேர் இருந்தனர்.
இதனிடையே, சுமார் 13 ஆயிரத்து 500 டன் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த ஆயில் டேங்கர் கப்பல், கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஞாயிற்றுக்கழமை, கப்பல் இருப்பிடத்தை கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடற்கொள்ளையர்களிடம் இருந்து பத்திரமாக ஆயில் டேங்கர் ”மரைன் எக்ஸ்பிரஸ்” கப்பல் மீட்கப்பட்டு இருப்பதாக ஆங்லோ ஈஸ்டர்ன் கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“கடற்கொள்ளையர்களால் பிப்ரவரி 1-ஆம் தேதி கடத்தப்பட்ட எம்.டி மரைன் எக்ஸ்பிரஸ் கப்பலானது தற்போது கேப்டன் மற்றும் சிப்பந்திகளின் கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்; சிங்கப்பூர் நேரப்படி 4 மணிக்கு கப்பல், கேப்டன் கட்டுப்பாட்டில் வந்ததாகவும் மாலுமிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்; நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என கப்பல் நிறுவன டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.