ராகுல் காந்தியை காணோம்... நள்ளிரவில் முளைத்த போஸ்டர்கள் ... கணக்கிலும் தப்பு... அமேதியில் பரபரப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலிலும் அங்கு போட்டியிடுகிறார். வரும் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் அங்கு தீவிரப் பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராகுல்காந்தியை காணவில்லை என்று அமேதி தொகுதியில் நேற்று இரவோடு இரவாக முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தொகுதி முழுவதும் இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொதுமக்கள் நிற்பது போன்ற படங்களுக்கு மத்தியில், 15 வருடங்கள், வருடத்திற்கு 365 நாட்கள் வீதம் 5475 நாட்களாக எங்கே அமேதி தொகுதி எம்.பி? என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இரவோடு இரவாக திடீரென முளைத்த இந்த போஸ்டர்கள் காங்கிரசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரசார் புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அந்தப் போஸ்டர்கள் அனைத்தும் அவசர, அவசரமாக அகற்றப்பட்டன.
ராகுல் காந்திக்கு எதிராக அச்சடிக்கப்பட்ட இந்த போஸ்டரிலும், அச்சடித்தவர்கள் ஆர்வக்கோளாறில், அவசரக்கோலத்தில் ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை என்று அச்சடித்துள்ளனர். உண்மையில் 2009,2014 தேர்தல்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாகத்தான் அந்தத் தொகுதியின் எம்.பி.யாக ராகுல் காந்தி இருந்தார் என்பது கூட தெரியாமல் அவசரக் கோலத்தில் போஸ்டரை அச்சடித்துள்ளனர்.
அமேதி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போஸ்டர்களை அச்சடித்தது யார்? எங்கு அச்சிடப்பட்டது? என்ற விபரங்கள் எதுவும் இல்லாததால் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த மறுநிமிடம் என் கைகளில் தவழ்ந்தவர் ராகுல் காந்தி...! பழைய நினைவுகளில் மூழ்கிய வயநாடு நர்ஸ் பாட்டி