ஆதீனமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்ட நித்தியானந்தா!

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டதற்கு நித்தியானந்தா மன்னிப்பு கேட்டதை அடுத்து, வழக்கு முடியும் வரை மதுரை ஆதீனத்திற்குள் நுழைய மாட்டோம் என்று நித்தியானந்தா உத்தரவாதம் அளிக்க உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.

மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆதீனம் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா, ‘‘நான்தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி என்றும், ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாகவே இருப்பார். அந்த நியமனத்தை எவராலும் ரத்து செய்ய முடியாது’’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த பதில் மனுவை திரும்ப பெறவிட்டால் நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாயன்று (பிப். 6) மீண்டும் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், மேலும் அந்த பதில் மனு தாக்கல் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நித்தியானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று கொண்ட நீதிபதி, கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மதுரை ஆதீனத்திற்குள் நுழைய மாட்டோம் என்று நித்தியானந்தா உத்தரவாதம் அளித்தால் இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும், இல்லையென்றால் வழக்கை தொடர்ந்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதிலளிக்க நித்தியானந்தா தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கை பிப்ரவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

More News >>