மன்மோகன் ஆட்சியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி கிண்டல் : ராணுவத்தையே சந்தேகிப்பதா?- மோடி மீது காங்.விளாசல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதற்கு ஆதாரம் எங்கே என பிரதமர் மோடி கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராணுவத்தையே பிரதமர் மோடி சந்தேகிப்பதா? என்று விளாசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் , விமான தாக்குதல் போன்றவற்றையே பிரதானப்படுத்தி பிரதமர் மோடி வருகிறார். இதற்கு பதிலடியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. அதையெல்லாம் பிரதமர் மோடி போல் நாங்கள் அரசியல் ஆதாயத்திற்காக வெளியில் சொல்லவில்லை என்று கூறியிருந்தார்.

மன்மோகன்சிங் இவ்வாறு கூறியதை கிண்டல் செய்யும் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் | நடத்தியதற்கு ஆதாரம் இருக்கிறதா? 4 மாதங்களுக்கு முன்பு, ஒரு காங்கிரஸ் தலைவர், தங்களது ஆட்சியில் 3 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். தற்போது, மற்றொரு தலைவர் 6 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார். தேர்தல் முடிவதற்குள், இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தாலும் உயரும். அவர்கள் காகிதத்தில்தான் துல்லிய தாக்குதல் நடத்தினர். அதனால் என்ன பயன்?

பா.ஜனதா ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் கேலி செய்தனர். பிறகு நிராகரித்தனர். பின்னர், எதிர்த்தனர். தற்போது, நாங்களும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே பொய். இந்த தலைவர்கள் வீடியோ கேம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில், துல்லிய தாக்குதலை ரசித்தவர்கள், அதை ஒருவகை விளையாட்டு என்று கருதி விட்டார்கள் போலும் என பிரதமர் மோடி கிண்டலாக கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் போர், வங்கதேச போர் போன்ற பெரிய போர்களில் வென்ற போதெல்லாம் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேட முயன்றதில்லை.அந்த வெற்றி முழுவதும் இந்திய படைகளுக்கும், வீரர்களுக்கும் தான் சொந்தம். தற்போது ராணுவத்தின் சாதனைகளை பெருமையாகக் கூறி பிரதமர் மோடி தான் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். நாங்களும் சர்ஜிகல் நடத்தினோம் என்பதைக் கூறினால், அதை பிரதமர் மோடி சந்தேகிப்பது காங்கிரசை மட்டுமல்ல; இந்திய ராணுவத்தையும் சந்தேகிப்பதாக உள்ளது. இது எங்களுக்கு வந்தால் ரத்தம்.., உங்களுக்கு வந்தால் வெறும் தண்ணீர்...என்று பிரதமர் மோடி கூறுவது போல உள்ளது என்று அகமது படேல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’! –தேதியுடன் விவரங்கள் வெளியீடு
More News >>