அடுத்த 26 நாட்களுக்கு உஷாரா இருங்க.....! தொடங்கியது கத்திரி வெயில்
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து என்று சொல்லலாம். வேலூர், சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெயில் கொளுத்தி எடுத்தது. 100 டிகிரியை தாண்டும் அளவிற்கு வெப்பம் அதிகரித்தது, மக்களை வாட்டி எடுத்தது வெயில். அதோடு, அனல்காற்றும் சேர்ந்து கொண்டது. வெயிலை சமாளிக்க முடியாமல் பல இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். அதேபோல், இந்த ஆண்டு மே 4- ம் தேதி (இன்று) தொடங்கும் கத்திரி வெயில் 29-ம் தேதி வரை, அதாவது மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபோனி புயல் வட தமிழக கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்பதால், தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை ஏமாற்றி திசை மாறியது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கி விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கத்தரி வெயில் அதிக உக்கிரம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், தண்ணீர் தட்டுபாடு மேலும் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்லுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்; பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும்; நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
‘உணர்ச்சியை ஆழம் பார்த்தது...மனதால் ஜீவியை இறுக அணைத்தேன்’ – ‘ஜெயில்’ இசையில் நெகிழ்ந்த வசந்தபாலன்