வந்தாச்சு மாம்பழம் சீசன்! கூடவே அதிகாரிகள் ரெய்டும் தொடங்கியாச்சு!

பொதுவாக கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கி விடும். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான மாம்பழம் பிரியர்கள் உற்சாகம் அடைந்து விடுவர். இந்த மாம்பழம் சீசனில் பழக்கடைகளில் விதவிதமான மாம்பழங்கள் வந்து குவியும். பார்த்த உடனேயே நம்ம வாயில் தானாகவே எச்சி ஊறி விடும்.

அதேசமயம் சில வியாபாரிகள் லாப நோக்கில் செய்யும் செயலால் மாம்பழம் என்றாலே சிலர் அலறியடித்து ஒடுகின்றனர். கார்பைட் கல் வைத்து மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கார்பைட் கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.விவசாயிகள் யாரும் மாம்பழங்களை கல் வைத்து பழுக்க வைப்பதில்லை. தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் சில வியாபாரிகள், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, காய்கள் 100% முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, அதாவது 70 அல்லது 80% அளவுக்கு மட்டுமே முதிர்ந்த காய்களை அறுவடை செய்து விடுகிறார்கள். இந்தக் காய்கள், இயற்கையாகவே பழுக்காது, அதனால்தான் கல் (கார்பைட் கல்) வைத்து பழுக்க வைக்கிறார்கள்.

இதை சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்களில் இயற்கையானச் சுவை, தரம், நிறம் எதுவும் இருக்காது. இந்தப் பழங்களை அதிக நாள் இருப்பு வைக்கவும் முடியாது,

கல் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகள் மற்றும் மாம்பழம் குடோன்களில் அடிக்கடி அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். சோதனையின் போது, கார்பைட் கல்லில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்து விடுவார்கள்

உதாரணமாக, நேற்று பழனியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரச் சாலையில் உள்ள பழக் கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்பைட் கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் அளவிலான மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தி குப்பையில் வீசினர்.

அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!
More News >>