கடவுள் தனக்கு இடம் கேட்பதில்லை தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் - நீதிமன்றம் அதிரடி

தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கேட்பதில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோட்டை பாளையத்தம்மன் கோவிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாச்சியரும் நோட்டீஸ் அனுப்பினர்.

இதை எதிர்த்து கோவில் பூசாரி குருசாமி என்கிற அப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோவிலை 50 வருடமாக பராமரித்து வருகிறோம். எனவே, கோவிலை அகற்றும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால், நீதிபதி எஸ். வைத்தியநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்த பிறகே காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதிகள், “தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என சொல்லப்படும் கடவுள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கேட்பதில்லை.

தெய்வங்களின் சிலை வைத்து கோவில் எழுப்ப விரும்பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடத் தில் கட்டியுள்ள அந்தக் கோவிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலன கோவில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுயநலத்திற்காகவே அமைக்கப்படுகிறது” என்று தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

More News >>